தற்போது அமீரகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மூலமாக உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது நிகழ்ச்சிக்காக புதுவையில் உள்ள கவிதை வானில் கவிமன்றம் மற்றும் கனடா நாட்டின் சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய, "இந்தியா ப்ரைட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்" காமராஜர் பிறந்த தின 118 மணி நேர தொடர் உலக சாதனை முத்தமிழ் அரங்கம் உலகெங்குமிருந்து பங்கெடுத்த தமிழ் ஆர்வலர்களினால் மிக சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி ஜூலை 16ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை இடைவிடாது தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்ச்சியில் குறிப்பாக கவிதை, கவியரங்கம், இசைக் கருவி பாட்டு, நடனம், கலந்துரையாடல், நாட்டுப்புறப்பாட்டு, பொம்மலாட்டம், பறை, ஒயிலாட்டம், ஓவியம், வினாடி வினா, என பல கலை வடிவங்களில் பாரத ரத்னா விருது வென்ற திரு. காமராஜரை போற்றி நிகழ்ச்சிகள் வழங்கினர் பன்முக திறமைப் படைத்த அமீரக வாழ் தமிழர்கள்.
மாபெரும் இந்நிகழ்ச்சியில் குறிப்பாக பத்து ஒருங்கிணைப்பாளர்கள், ஒருவருக்கு 80 பங்கேற்பாளர் வீதம் பல ஊர்களிலிருப்போரை தொடர்பு கொண்டு பத்து மணி நேர நிகழ்ச்சிக்கான நிரலை தயார் செய்து, பொறுமையுடன் நேரம் ஒதுக்கி, 51 மணி நேர நிகழ்வாக தொடங்கிய நிகழ்வினை, பங்கெடுப்போரின ஆர்வம் கருதி, பின் 75 மணி நேரம், பின் 118 மணி நேரம் என ஏறத்தாழ ஆயிரம் பேர் பங்குகொண்ட நிகழ்வாக நிறைவடைய செய்தனர். உலகின் பல ஊர்களிலிருந்தும், ஆசிரியர்கள், முனைவர்கள், இல்லத்தரசிகள், பாடகர்கள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள், சிறு குழந்தைகள், மூத்த தமிழர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.