5 வயதில், 105 நிமிடத்தில், 36 புத்தகங்களை வாசித்து இந்திய வம்சாவளி சிறுமி சாதனை!

Update: 2021-04-12 11:51 GMT

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கியாரா என்ற 5 வயது சிறுமி 105 நிமிடத்தில் 36 புத்தகங்களை வாசித்து சாதனை படைத்துள்ளார். சென்னையை பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் குடியேறிய ரவீந்திரநாத் என்பவரது 5 வயது மகள் கியாரா. நினைவு தெரிந்த நாளிலிருந்து இவருக்கு புத்தகங்கள்மீது ஆர்வம் அதிகம். இதனை அடுத்து இவரது பெற்றோர் இவருக்கு அதிக புத்தகங்களை வாங்கிக் கொடுத்து புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டினார். ஒரு நாளில் கிடைத்த நேரத்தில் எல்லாம் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் கியாரா. ஆலிஸ் இன் வொண்டர் லேண்ட், சின்ரெல்லா, ஷூட்டிங் ஸ்டார் உள்ளிட்ட பல குழந்தைகளுக்கான கதைகளையும், புதினங்களையும் அதிவேகமாக படிக்கும் திறனை பெற்றார் கியரா.


ஒரு புத்தகத்தை வாசிக்க இவர் மிகக் குறைந்த நேரத்தையே எடுத்துக் கொண்டுள்ளார். ஐந்து வயதில் இந்த அளவு வேகத்தில் ஒரு புத்தகத்தை வாய்விட்டு படித்து முடிக்கும் திறன் இவருக்கு வந்ததை அடுத்து தங்களது மகளின் திறமையை உலகுக்கு காட்ட இவரது பெற்றோர் விரும்பினர். இதனை அடுத்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு இவரது பெயரை விண்ணப்பித்தனர்.


105 நிமிடங்களில் இவர் 36 புத்தகங்களை முழுவதுமாக வாய்விட்டுப் படித்து முடித்து விடுவார். இடையில் சிறிது நேரம்கூட ஓய்வு எடுக்க மாட்டார். அதிவேகமாக ஆங்கில வரிகளை படித்தாலும் புத்தகத்தின் கருத்தை மனதில் ஏற்றிக்கொள்வார். வார்த்தைகளில் பிசகு இருக்காது. இவரது மொழி ஆற்றல் மற்றும் வேகத்தை பாராட்டி இந்த கவுரவம் இவருக்கு கிடைத்துள்ளது. உலகில் மிகக்குறைந்த வயதில் இந்த சாதனையைப் படைத்த குழந்தை கிராயாதான். எதிர்காலத்தில் மருத்துவராகும் லட்சியம் கொண்ட இவர், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

Similar News