NRI-களுக்கு கொரோனா பரிசோதனையில் சலுகை காட்டும் பிரிட்டன் அரசு !
NRI-கள் இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் பொழுதும், அவர்கள் அங்கு மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனையில் சலுகைகளை வழங்குகிறது பிரிட்டன் அரசாங்கம்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்தது. அப்பொழுது இருந்த சூழ்நிலையில் இந்தியாவை பிரிட்டன் சிவப்புப் பட்டியலில் வைத்தது. அதன்படி இந்தியாவில் இருந்து பிரிட்டன் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதனால் அங்கு வேலை பார்க்கும் மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்பட்டது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்தியாவை சிவப்புப் பட்டியலில் இருந்து பிரிட்டன் நீக்கியது.
பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினருக்கான கொரோனா பரிசோதனை கட்டணத்தை பிரிட்டன் அரசு குறைத்துள்ளது. பிரிட்டன் அனுமதித்த நாடுகளைச் சேர்ந்தவா்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டிருந்தால், அவர்களுக்கான கொரோனா பரிசோதனை கட்டணத்தை இந்திய மதிப்பு சுமார் 3000 வரை குறைத்து உள்ளது.
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பிரிட்டன் சென்ற இரண்டு நாள்களுக்குள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம். குறிப்பாக இந்தியர்கள் பிரிட்டன் சென்ற இரண்டாவது நாளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கான பரிசோதனை கட்டணமும் தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image courtesy: NDTV news