மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக நினைவு நாணயம் ! பிரிட்டன் அமைச்சர் அறிவிப்பு !
தற்போது பிரிட்டனில் மகாத்மா காந்தி அவர்களுக்கு சிறப்பு நினைவு நாணயம் ஒன்றை பிரிட்டன் நிதி அமைச்சர் வெளியிட உள்ளார்.
உலகில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களாலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் இந்த பண்டிகையை வெகுவிமரிசையாக தங்களுடைய நாடுகளில் கொண்டாடி வருகின்றார்கள். அத்தகைய தீபாவளி பண்டிகையில், மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசுத் தரப்பு அறிவிப்பை பிரிட்டன் நிதி அமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனாக் அவர்கள் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியிட்டார். அதற்கான மாதிரி நாணயத்தையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இந்திய வம்சாவளி ஆன இவர் இதுபற்றி கூறுகையில், "இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதால், தீபாவளியன்று இந்த நாணயத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முக்கியமான காரணமாக விளங்கிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பிரிட்டனில் நாணயம் வெளியிடப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது" என்று அவர் கூறினார்.
குறிப்பாக பிரிட்டன் வெளியிடும் நாணயத்தில் இந்தியாவின் தேசிய மலரான தாமரையும், மகாத்மா காந்தியின் பொன்மொழி ஒன்றும் பொறிக்கப் பட்டுள்ளது. மேலும் குறிப்பாக, இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடிய மகாத்மா காந்தி அவர்களுக்காக முதல் முறையாக பிரிட்டன் நினைவு நாணயம் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரிக்கப்பட உள்ள இந்த நாணயம் நேற்று முதல் விற்பனைக்கு விடப்படப் பட்டிருக்கிறது.
Input & Image courtesy:NDTV news