டென்மார்க்-இந்திய உறவின் தனித்துவம் ! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் விளக்கம் !
இந்தியாவின் முக்கிய வளர்ச்சி பாதைகளில், டென்மார்க்கின் பங்கு அதிகளவில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் வளர்ச்சியில் டென்மார்க்குக்கு முக்கியப்பங்கு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தனித்துவமான உறவு நிலவுவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் Dr.S.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தற்பொழுது ஐரோப்பிய நாடான ஸ்லொவேனியா, குரோஷியா, டென்மார்க் ஆகியவற்றுக்கு அரசு முறை பயணம் மேற் கொண்டுள்ளார். டென்மார்க் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெப் கேபோட் உடன், கூட்டு கமிஷன் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
இதன் பின், அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி கூறுகையில், "டென்மார்க்குடன் இந்தியாவுக்கு தனித்துவமான உறவு உள்ளது. மற்ற நாடுகள் போல் அல்லாமல், டென்மார்க்குடன் பசுமை உறவை இந்தியா பேணுகிறது. வெறும் வளர்ச்சி அடைவது மட்டுமின்றி, மீண்டும் பசுமை வளர்ச்சி அடைய விரும்புகிறோம். அதற்கு டென்மார்க் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். இந்த கூட்டத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான கூட்டு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனில் 10 செயற்குழுக்கள் உள்ளன.
அதில், சுகாதாரத்திற்காக புதிய செயற்குழு 11வதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் செய்யும் டென்மார்க்கை சேர்ந்த மிகப்பெரிய ஐந்து நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினேன். டென்மார்க்கை சேர்ந்த 200 நிறுவனங்கள் இந்தியாவிலும் செயல்பட்டு வருகின்றன. பல இந்திய நிறுவனங்கள் டென்மார்க்கில் தொழில் செய்து வருகின்றன. இந்த உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.