சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியர் பட்டியல்: இடம் பிடித்த இரண்டு இந்தியர்கள் !
சர்வதேச அளவில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான பட்டியலில் தற்போது இரண்டு இந்திய ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.;
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த வர்கி அறக்கட்டளை மற்றும் யுனெஸ்கோ இணைந்து சர்வதேச ஆசிரியர் பரிசை ஆண்டு தோறும் அளித்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் ஆசிரியருக்கு 7.50 கோடி ரூபாய் பரிசு தொகையுடன் விருதும் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவிலான சிறந்த ஆசிரியருக்கான பரிசுப் போட்டியில், 50 சிறந்த போட்டியாளர்கள் பட்டியலில் இரண்டு இந்திய ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் பரிசை, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ரஞ்சித் சின்ஹ் திசால் என்பவர் வென்றார். இந்த ஆண்டுக்கான அறிவிப்பு வெளியானதும் 121 நாடுகளில் இருந்து 8,000 ஆசிரியர்கள் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 50 சிறந்த ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், பீஹாரின் பாகல்பூரைச் சேர்ந்த கணித ஆசிரியர் சத்யம் மிஷ்ரா மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர் மேக்னா முசுனுரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவை தவிர சர்வதேச மாணவருக்கான பரிசு போட்டியில் புதுடில்லி, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் டாப் 50 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான டாப் 10 பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும். அதில் இருந்து சிறந்த ஆசிரியர், மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசு அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Input & image courtesy:India Today