ரஷ்யா- உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை வகிக்க காரணம் இதுதான்: பிரதமரின் விளக்கம்!
உக்ரைன்-ரஷ்யா போரின் போது இந்தியா நடுநிலை வகிக்க காரணம் இதுதான், பிரதமர் மோடி அவர்களின் விளக்கம்.
தற்போது நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க வென்று பெரும்பாலான இடத்தை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக டெல்லி கட்சி தலைமையகத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பா.ஜ.க அணி பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி குறித்து உரையாடினார். அதன் பின்னர் தற்பொழுது உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும், ரஷ்யா உக்ரைன் மீதான போர் குறித்து இந்தியா நடுநிலை காப்பது ஏன்? என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா எப்போதும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தற்பொழுது நடந்துவரும் உக்ரைன் ரஷ்ய போர் குறித்து கூறுகையில், இரு நாடுகளுடன் இந்தியாவின் உறவு வலுவானது. குறிப்பாக இரு நாடுகளுடனும் இந்தியாவின் வர்த்தகம், கல்வி, பொருளாதாரம், ஏற்றுமதி, இறக்குமதி போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்புடைய அனைத்தும் அடங்கியுள்ளது. இரு நாடுகளுடன் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் இந்தியா தற்போது அணிசேரா நாடாக இருப்பதற்கும் காரணம் இதுதான். மேலும் நாம் எடுக்கும் ஒரு முடிவு பின்னர் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அமைதி மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும், போர் என்றுமே தீர்வாகாது என்பதையும் பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போர் நடைபெறும் நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பொருட்டு மத்திய அரசு மிஷன் கங்கா திட்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் இதைப்பற்றி எதிர்க்கட்சியினர் தவறுதலாக விஷயங்களை இளைய தலைமுறையினரிடம் பரப்பி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை மீட்கும் முயற்சியில்தான் இந்த திட்டம் முக்கியமாக செயல்படுத்துகிறது. எனவே மத்திய அரசு இன்று ஒருதலைப்பட்சமாக செயல்படாது என்பதையும் பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
Input & Image courtesy: Vikatan