வாய்ப்புகளை விடாதே! உன் ஆசைகளுக்கு நீயே எல்லை! காலம் கடந்தும் பேசப்படும் கடின உழைப்பாளி! - கே.வி.ஆனந்த்
கலைத்துறை என்றுமே உழைப்பாளர்களையும், திறமையானவர்களையும், வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்த தெரிந்தவர்களையும் கைவிட்டதில்லை! அவர்களை காலத்தின் போக்கில் சரியான உயரத்தில் அமர வைத்தே தீரும்! அப்படிப்பட்ட ஒரு உதாரணம்தான் இன்று மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் திரு.கே.வி.ஆனந்த் அவர்கள்.
54 வயதான இவர் தனது பணியை துவங்கியது பத்திரிக்கை புகைப்பட கலைஞராக. 80'களின் பிற்பகுதியில் இருந்து 90'களின் முற்பகுதி வரை தன் ஆசைப்பட்ட புகைப்பட துறையில் தனக்கு கிடைத்த சிறு வாய்ப்புகளையும் கூட உதாசீனப்படுத்தாது சொற்ப வருமானந்தில் பத்திரிக்கை புகைப்பட கலைஞராக தனக்கு பிடித்தமான துறையில் பணியை துவங்கினார்.
இந்தியா டுடே, கல்கி மற்றும் சில பத்திரிக்கை'களில் இவரது புகைப்படங்கள் அந்த காலகட்டங்களில் மிகப்பிரபலம்.
பின்னர் தன் ஒளிப்பதிவு ஆசையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல முயன்ற பொழுதுதான் இவருக்கு இந்தியாவின் முக்கிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களின் அறிமுகம் மற்றும் அவரின் உதவியாளராக வாய்ப்பு கிடைத்தது. ஜீவா, எம்.எஸ்.பிரபு போன்ற ஒளிப்பதிவு ஜாம்பவான்கள் அப்பொழுது பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் மத்தியில் ஆறாவது உதவியாளராக இணைந்தார்.
கோபுர வாசலிலே, அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா என ஒளிப்பவுக்கு பாடம் எடுக்கும் வகையான படங்களை பி.சி.ஸ்ரீராம் அவர்கள் கொடுத்ததன் பின்னணியில் உழைத்தவர்களில் இவரும் முக்கியமானவர்.
ஒளிப்பதிவின் மாஸ்டரான பி.சி.ஸ்ரீராமிடம் கற்ற வித்தையை பயன்படுத்த பி.சி.ஸ்ரீராம் அவர்களே வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். 1994'ம் ஆண்டு ஒளிப்பதிவை கொண்டாடும் மலையாள திரையுலகம் ஓர் திரைப்பட ஒளிப்பதிவிற்காக பி.சி.ஸ்ரீராம் அவர்களை அணுகியபோது நேரமின்மையால் அந்த வாய்ப்பை பரிந்துரையின் பேரில் கே.வி.ஆனந்த் அவர்களுக்கு வழங்கினார்.