எதிர்கால அரசியலை தீர்மானிக்க போகும் இந்துக்கள் வாக்கு வங்கி மற்றும் தமிழ் தேசியம்!

Update: 2021-05-04 09:45 GMT

தமிழக அரசியல் களம் மாறியுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழகத்தில் திராவிடம் என கூறி அரசியல் செய்ய இயலாது என்பதையும், கடந்த தேர்தல் எந்த வகையில் அந்த மாற்றத்தை நிகழ்த்தி காட்டியது என்ற விளக்கத்தையும் சுந்தர் ராஜ சோழன் அவர்கள் விளக்கியுள்ளார்.

பாஜக - அதிமுக இரண்டின் Contested average நன்றாகவே உள்ளது.அதிமுக பெரிய சமூகங்களின் வாக்குகளை எல்லாம் பெற்றிருக்கிறது இல்லை என்றால் இவ்வளவு நெருக்கமாக ஏறி வந்திருக்க முடியாது..

கொங்கினை பொறுத்தவரை எல்லா சமூகங்களும் ஒருங்கிணைந்து வாக்களித்திருக்கிறார்கள் அதிமுகவிற்கு.2019 ல் வெளியேறிய அருந்ததியர் வாக்குகளை உள்ளே கொண்டு வர பாஜக பெருமளவு உதவியிருக்கிறது.திரு.முருகனை தலைவராக போட்டது மிக முக்கியமான காரணம்,அதே போல திமுகவில் இருந்து அருந்ததியினர் சமூக முகங்களில் ஒருவரான விபி துரைசாமியை எடுத்ததெல்லாம் நல்ல மூவ்.

இதர எண்ணிக்கை சிறிய மற்றும் தெலுங்கு சமூகங்களிடம் ஹிந்து என்ற அரசியல் விழிப்பு பெற்றவர்கள் கொங்கில் அதிகமாக இருப்பதைத்தான் இந்த வெற்றி காட்டுகிறது.சாதிய முரண்களை தாண்டி ஹிந்து என்கிற உணர்வு கொங்கில் வந்திருக்கிறது என்பது ஓரளவு உண்மை.

ஆனால் ஹிந்துத்துவா எடுபடாத இடங்களில் எண்ணிக்கை சிறிய சமூகங்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை.ஆரம்பத்தில் இருந்தே இதை அதிமுக கவனிக்க தவறியதை பல முறை நிறைய பேர் சுட்டிக்காட்டினோம் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.நாயுடு,செங்குந்தர்,கோனார்,முதலி,பிள்ளை,போன்ற பல சமூகங்களில் அதிமுக ஆதரவு நிச்சயமாக உண்டு.ஆனால் ஏனோ இந்த வாக்குகள் தங்களுக்கு வரவே வராது என்று அதிமுக முடிவு செய்தது போல இருந்தது.

இந்த சமூகங்களில் எல்லாம் ஹிந்து என்ற உணர்வு பெற்றார்களோ? யாருக்கு திமுக எதிர்ப்பு இருந்ததோ அவர்கள் வாக்களித்தார்களே தவிர மற்றவர்கள் திமுக - நாம் தமிழர் - MNM என்று நகர்ந்துவிட்டார்கள்.இதேதான் தெலுங்கு சமூகங்களிலும்,வண்ணார்,நாவிதர் குயவர் போன்ற சமூகங்களிடமும் நிகழ்ந்திருக்கிறது.

டெல்டாவில் பறையர் சமூகம்,முத்தரையர்கள் பெருமளவு அதிமுகவுக்கு எதிராக வாக்களித்துவிட்டார்கள்.இவர்கள் இருவருமே எம்ஜிஆர் - ஜெ காலத்தில் வலுவாக அதிமுகவுக்கு வாக்களித்த சமூகம்.எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு முழுமையாக வராது என்றாலும் அதை ஓரளவு எடுப்பதற்கு கூட சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை.

தேவேந்திரர் வாக்குகள் பெருமளவு அதிமுக கூட்டணிக்கு வந்திருக்கிறது.முக்குலத்தோர் வாக்குகள் கூட பெருமளவு வெளியேறவில்லை சரிபாதி அளவு வந்துவிட்டது.ஆனால் எண்ணிக்கை சிறிய மற்றும் இதர சமூகங்கள் வாக்குகளை எடுக்க முடியவில்லை என்பதே தென்மாவட்ட தோல்விக்கு பெருமளவு காரணம்.அமமுக தோல்விக்கு காரணமாக சொற்ப தொகுதிகளில் இருக்கலாம்.ஆனால் அதை விட அதிக வாக்ககுகளை நாம் தமிழர் பெற்றிருக்கிறது,அதுவும் அதிமுக வாக்குகள்தான் என்பதை பார்க்க வேண்டும்.


வடமாவட்டத்தில் பல நூறு ஆண்டுகளாக நடக்கும் வன்னியர் மற்றும் வன்னியரல்லாதவர் அரசியல் மீண்டும் வென்றிருக்கிறது.இதை புரிந்து கொண்டால்தான் அங்கே யாரும் அரசியல் செய்ய முடியும்.அதில் திமுகவை பொறுத்தவரை Caste neutral தலைமையை வைத்திருக்கிறது அது கூடுதல் பலம்.ஆயினும் தர்மபுரியை எல்லாம் பெருமளவு எடுத்திருக்கிறார்கள்.பாமக அமைப்பு பலமான இடத்தில் இது சாத்தியமாகியுள்ளது.

அதிமுக இந்த தேர்தலில் நியாயப்படி 35 தொகுதிகளை தாண்டியிருக்க முடியாது..ஆனாலும் எடப்பாடியின் உழைப்பு,சாதுர்யம்,பாஜகவை அவர் தேக்கி வைத்துக் கொண்டது,பாமகவை அரவணைத்தது எல்லாமே அதிமுக என்கிற கட்சியை பிரதான எதிர்கட்சியாகவே களத்தில் வைத்திருக்கிறது வாக்கு சதவிகித ரீதியிலும்

பிற மண்டலங்களுக்கு கொங்குநாடு ஒரு பாடம்.திராவிடம் என்கிற அரசியல் தளம் எப்படி சமூகங்களை இணைக்குமோ அதுபோல ஹிந்து என்கிற அரசியல் தளம்தான் சமூகங்களை இணைக்கும்.திராவிடம் என்கிற தளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள திமுகவால் மட்டும்தான் முடியும்.அதனால்தான் செல்வி.ஜெவெல்லாம் Backing community அரசியல் செய்தார்.1998 களுக்கு மேல் தமிழகத்தில் உருவான ஹிந்து அரசியல் அலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.நிற்க.


அடுத்தது தமிழகத்தில் தமிழ் தேசியம் என்ற பொதுத்தளம் விஸ்வரூபம் அடைந்துள்ளது.அது மூன்றாவது சக்தியாக எழுந்துள்ளது.அது தூரமாக இருப்பதாக நினைக்கலாம் ஆனால் அது மேலும் மேலும் வளரக்கூடியது,அது பாய்ச்சலுக்குரியது என்பதை இந்த தேர்தல் நிரூபித்துவிட்டது.எல்லா தொகுதியிலும் 10000 வாக்குகளை பெற்றிருக்கிறது அந்தக்கட்சி.

2009 க்கு மேல் அதிமுகவுக்கு வந்த தமிழ் தேசிய ஆதரவு வாக்குகளையும்,எண்ணிக்கை சிறிய மற்றும் பட்டியல் பிரிவு சமூக வாக்குகளையும் சீமான் பிரித்தெடுக்கிறார் என்பதை அதிமுக கவனிக்க வேண்டும்.

அதிமுக - பாஜக - பாமக இந்த கூட்டணி நன்றாகவே தேர்தலை சந்தித்துள்ளார்கள்.அதிமுக 10 வருட ஆட்சி,பாஜக 7 வருடத்துக்கு மேல் மத்தியில் ஆட்சி.இந்த சுமையோடு தேர்தலை சந்தித்து இந்த அளவு வந்ததே பாராட்டத்தக்கது.இது ஒரு படுதோல்வி அல்ல மாறாக பாஜக மற்றும் பாமகவுக்கு நல்ல துவக்கம்.


அதிமுகவை பொறுத்தவரை அதனுடைய வலிமை வாய்ந்த தலைவி இல்லாமல் 1 கோடியே 43 லட்சம் வாக்குகளை பெற முடிகிறது என்றால்? அதுவும் 10 வருட ஆட்சிக்கு பிறகு என்றால்? எடப்பாடி பழனிச்சாமி ஒரு தலைவராகியுள்ளார்,திமுகவுக்கு எதிர்ப்பு உள்ளது,NDA கூட்டணிக்கு மக்களிடம் நல்ல ஆதரவு உள்ளது என்பதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

அடுத்தடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல்கள்,இடைத்தேர்தல்கள் என தங்கள் வலிமையை இந்த கட்சிகளால் சரி பார்த்துக் கொள்ள முடியும்.ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக சட்டன்றத்தில் செயல்பட முடியும்.திராவிட கட்சிகளில் முதல் முறையாக ஒரு எண்ணிக்கை பெரிய சமூகத்தை சேர்ந்தவர் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்துக்குள் நுழையப் போகிறார் என்பது கூடுதல் சுவாரஸ்யம் மிக்கது.பார்ப்போம்.

Similar News